சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட செல்வ வரி தொடர்பான கணக்கை முறையாக பல ஆண்டுகள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்திருந்தனர். செல்வ வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதிவானது. இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் கடந்த 2008, மற்றும் 2009ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். வழக்கு நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன் மற்றும் சமீம் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தீபக் தரப்பு வழக்கறிஞர் சுதர்சன் ஆஜராகி, மேல் முறையீடு செய்த வருமானவரி துறை அனைத்து ஆவணங்களையும் தங்களுக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும். எனவே, ஆவணங்கள் அனைத்தையும் வருமானவரித்துறை மறைந்த ஜெயலலிதா வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதி தள்ளிவைத்தனர்.
