‘‘அம்மா தாயே… பண்ணாரி அம்மா’’ பக்‌தி கோஷம் முழங்க பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ‘‘அம்மா தாயே… பண்ணாரி தாயே’’ என பக்தி கோஷம் முழங்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மார்ச் 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.

முன்னதாக கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பண்ணாரி அம்மன் சப்பரத்துடன் மேளதாளம் முழங்க படைக்கலத்துடன் தெப்பக்குளத்திற்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குண்டத்தின் முன்பு மேளதாளம் முழங்க ‘‘அம்மா தாயே… பண்ணாரி அம்மா’’ என பக்தர்கள் கோஷமிட்டபடி அதிகாலை சுமார் 3.55 மணியளவில் கோயில் பூசாரி பார்த்திபன் குண்டத்தை சுற்றிலும் கற்பூரங்கள் பற்றவைத்து குண்டத்தின் மீது பூப்பந்தை உருட்டி அம்மனிடம் வரம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். இதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதையொட்டி பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தபின் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குண்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார், தீயணைப்பு வீரர்கள், திருநங்கைகள் முக்கிய பிரமுகர்கள் என 1 லடத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் தலைமையில், ஈரோடு எஸ்பி கிரண் சுருதி மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்வு அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்றது. குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் நேரில் பார்வையிட்டார்.

பக்தர்களின் வசதிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. குண்டத்தைச் சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் குண்டம் இறங்கும் பக்தர்கள் தீக்காயம் படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவ குழுவினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் குண்டத்தின்அருகில் தயார் நிலையில் இருந்தனர். குண்டத்தில் தவறி விழும் பக்தர்கள் உடனடியாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குண்டம் இறங்கும் நிகழ்வைக் கண்டு களிக்க கோயில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் பெரிய திரை கொண்ட எல்இடி டிவிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விழாவில் வைகுந்த் காகித ஆலை பொது மேலாளர் விஸ்வநாதன், வாசவி தங்க மாளிகை உரிமையாளர் பிரபுகாந்த், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் நந்தகுமார், பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்டராமன், அமுதா, பூங்கொடி ஆகியோர் மேற்பார்வையில் விழா நடைபெற்றது. உபயதாரர்கள் மூலம் கோயிலின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் குண்டம் திருவிழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக குண்டம் திருவிழாவில் அரசியல் கட்சியினர் வருகை குறைவாக இருந்தது.

Related Stories: