திருமணம் ஆகாமல் கர்ப்பம் சுயமாக பிரசவம் பார்த்து சிசுவை கொன்று வீசிய மாணவி: காதலனுடன் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அடுத்த பொற்றையடி அருகே கரம்பவிளையில் உள்ள ஒரு கோயிலின் பின்புறம் உள்ள புதரில், ஒரு வாளியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் சிசு ஒன்று இறந்து கிடந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த பெண் பார்த்து தென்தாமரைக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) என்பவர் தான் குழந்தையை கொன்று வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ரெஜினாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரெஜினாவும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த முகேஷ் (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரிய வந்தது. இதன் விளைவாக, ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 29ம்தேதி காலை பிரசவ வலி வந்துள்ளது. அப்போது வீட்டில் உள்ள கழிப்பறையில் ரெஜினாவே தனக்கு தானே சுயமாக பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து முகேஷிடம் அவர் கூறியுள்ளார். இந்த குழந்தை நமக்கு வேண்டாம், எங்காவது போட்டுவிட்டு வந்து விடு. இருவரும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்று முகேஷ் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையை ஒரு துணியில் சுற்றி, பிளாஸ்டிக் வாளியில் வைத்து மூடியால் மூடி, கோயிலின் பின்புறம் உள்ள புதரில், ரெஜினா வீசிவிட்டுச் சென்றுள்ளார். போதிய கவனிப்பு இல்லாததால் அந்த குழந்தை அங்கேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ரெஜினாவையும், அவரது காதலன் முகேசையும் போலீசார் கைது செய்தனர். சுயமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றதால், அவரது உடல் நிலையை கவனிக்கும் வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முகேசும் மருத்துவ பரிசோதனைக்காக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். பச்சிளம் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

Related Stories: