சென்னை: வீடியோவை திருத்தி அவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் வெள்ளைச்சாமி புகார் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை, அபிராமபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் வெள்ளைச்சாமி நேற்று பெருநகர சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பிய புகார் மனுவில், நான் கடந்த 27ம் தேதி யூடியூப் சேனலில் வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து நடத்தப்பட்ட பேட்டிக்காக அழைக்கப்பட்டேன் மற்றும் பல்வேறு தலைவர்கள், அவர்களின் அரசியல் கட்சிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
குறிப்பாக நடிகர் விஜய்யின் நடத்தை பற்றியும், தவெக கட்சியின் பெண்கள், உறுப்பினர்கள், ரசிகர்கள் இடையே இத்தகைய மோசமான கலாச்சாரத்தை பொதுவாக கண்டிக்காமல் அமைதியாக இருந்து ஏன் ஊக்குவிக்கிறார் என்ற என் கவலையை வெளிப்படுத்தினேன். மேலும் மோசமான கலாச்சாரத்தை பரப்பும் நடிகர் விஜய்யின் சில ரசிகர்களையே நான் கண்டித்தேன். அனைத்து பெண்களையும் அல்ல, சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களின் மரியாதையை குலைக்க எனக்கு ஒருபோதும் நோக்கம் இல்லை, அப்படி எப்போதும் செய்யமாட்டேன். சமூகத்தில் பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. விஜய் மற்றும் சில ஆண்கள், பெண்கள் சமூக ஊடகங்களில் பொதுவில் மோசமான கலாச்சாரத்தை பரப்பும் நடத்தைகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்ட போது என் கவலையை வெளிப்படுத்தினேன்.
அது சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் அவதூறு செய்ததாக திட்டமிட்டு தவறாக விளக்கப்படுகிறது. இந்த வீடியோவில் குறிப்பிட்ட சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அவற்றை திருத்தி அவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டுள்ளனர். இதனால் மிரட்டல்கள், தொந்தரவுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா நடத்தி வரும் கால் சென்டர் மூலமும் கொலை மிரட்டல் அழைப்புகள், மோசமான வாட்ஸ் அப் செய்திகள் வருகிறது. நடிகர் விஜய், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், லயோலா மணி, நாஞ்சில் சம்பத் மற்றும் அவர்களின் கட்சி உறுப்பினர்கள் எனக்கு கொலை மிரட்டல்கள் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
