பல்லடம் : கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.பல்லடம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகம் படும் வகையில் வந்த கூண்டு வைத்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டயர் மற்றும் வேன் முன்புற கதவுகளில் மறைத்து வைத்து நூதன முறையில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் பல்லடம் அம்மாபாளையம் சுரேஷ் (39), கணபதிபாளையம் பிரகாஷ் (36) என்பதும், இவர்கள் இருவரும் பல்லடத்தில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றிகொண்டு கர்நாடகா மாநிலம் மைசூரில் டெலிவரி செய்து விட்டு, அங்கு குறைந்த விலைக்கு குட்கா வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
