சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (70). அப்பகுதியில் கோயில் பூசாரியாக இருந்தார். கடந்த 2024ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமி தன்னுடன் படிக்கும் மற்றொரு சிறுமியிடம் கூறியுள்ளார். அந்தச் சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததை அடுத்து, பள்ளி ஆசிரியை இது குறித்து குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் பெரியசாமி மீதான புகார் உண்மை என தெரிய வந்தது.

இதையடுத்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து பெரியசாமியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி கோகுல முருகன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், மூன்று குழந்தைகளுக்கும் காயம் ஏற்படுத்தியது, மிரட்டியது, பாலியல் தொந்தரவு செய்தது உள்ளிட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக தண்டனையும், அபராதமும் விதித்து, ஒவ்வொரு தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அதன்படி பெரியசாமிக்கு 178 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.5 லட்சம் அரசு சர்பில் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

Related Stories: