தவெக வேட்பாளர் பாலியல் சீண்டல் பெண் நிர்வாகி பரபரப்பு புகார்

சென்னை: திருவள்ளூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண வரவேற்பு விழாவில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூந்தமல்லி வேட்பாளர் குட்டி என்கிற பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட தவெக பெண் நிர்வாகி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி சங்கீதா (43). இவர், தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். அதில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சங்கீதா மணிகண்டனும் கலந்துகொண்டுள்ளார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான பிரகாசம் (எ) குட்டி என்பவர், அருகில் நின்றவாறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தனது உடலின் மீது 4 முதல் 5 முறை தவறான இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியதால், அதிர்ச்சி அடைந்த அவர் குட்டி என்கிற பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது குட்டி என்கிற பிரகாசம் உன் மனைவியின் கையை பிடித்து இழுத்தேனா அல்லது புடவையை அவிழ்த்து பார்த்தேனா என்பதுபோன்ற ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் நேற்று நடந்ததை வெளியில் சொன்னால், கொன்றுவிட்டு தடயமே இல்லாமல் செய்து விடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அப்போது போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில், குட்டி என்கிற பிரகாசம் போட்டியிடப் போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும், கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட பெண் நிர்வாகி சங்கீதா மணிகண்டன், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குட்டி என்கிற பிரகாசத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததால் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

Related Stories: