ஐஸ்கிரீம் வியாபாரியை கொன்று தலையை வீட்டுக்கு எடுத்து சென்ற கொடூரன் கைது: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

பாரபங்கி: உத்தரப்பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொன்று தலையை வீட்டிற்கு எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் பர்சாவால் கிராமத்திற்கு பப்லு (25) என்பவர் ஐஸ்கிரீம் விற்கச் சென்றார். அங்கிருந்த சங்கர் யாதவ் (50) என்பவருக்கும் பப்லுவிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சங்கர் யாதவ், தான் வைத்திருந்த அரிவாளால் பப்லுவை சரமாரியாக வெட்டினார். இதில் பப்லுவின் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பொதுமக்களின் கண் முன்னே இந்த கொடூரத்தைச் செய்த சங்கர் யாதவ், அங்கிருந்து தப்பிச் செல்லாமல் பப்லுவின் துண்டிக்கப்பட்ட தலையைத் தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றார்.

தகவலறிந்து வந்த போலீசார், சங்கர் யாதவின் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது எதுவுமே நடக்காதது போல் அவர் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவரிடமிருந்த பப்லுவின் தலையையும் கொலையப் பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்த போலீசார், சங்கர் யாதவை உடனடியாகக் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட பப்லுவின் உடல் மற்றும் தலை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர். ஐஸ்கிரீம் வியாபாரி கொல்லப்பட்ட சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் கதறி அழுவது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: