வாளியில் அடைத்து பச்சிளம் குழந்தை கொலை; குமரியில் கைதான நர்சிங் மாணவி காதலனுக்கு மருத்துவ பரிசோதனை

கன்னியாகுமரி:குமரியில் பச்சிளம் குழந்தை கொலை விவகாரத்தில், கைதாகி உள்ள நர்சிங் மாணவி, காதலனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இவர்களுக்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அடுத்த பொற்றையடி அருகே கரம்பவிளையில் உள்ள ஒரு கோவிலின் பின்புறம் உள்ள புதரில், ஒரு வாளியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பார்த்து தென்தாமரைக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) என்பவர் தான் குழந்தையை வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரெஜினாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரெஜினாவும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த முகேஷ் (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரிய வந்தது. இதன் விளைவாக, ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிப்பறையில் ரெஜினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து முகேஷிடம் அவர் கூறியுள்ளார். இந்த குழந்தை நமக்கு வேண்டாம், எங்காவது போட்டுவிட்டு வந்து விடு. இருவரும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்று முகேஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தையை ஒரு பையில் கட்டி கோவிலின் பின்புறம் உள்ள புதரில், ரெஜினா வீசிவிட்டுச் சென்றுள்ளார். போதிய கவனிப்பு இல்லாததால் அந்த குழந்தை அங்கேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று ரெஜினாவையும், அவரரு காதலன் முகேசையும் போலீசார் கைது செய்தனர். சுக பிரசவத்தில் குழந்தை பெற்றதால், அவரது உடல் நிலையை கவனிக்கும் வகையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

முகேசும் மருத்துவ பரிசோதனைக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளார். பச்சிளம் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்பட உள்ளது. பச்சிளம் குழந்தையை உயிருடன் வாளியில் வைத்து வீசி சென்றாரா? அல்லது ெகாலை செய்து வீசி சென்றாரா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர். இந்த சம்பவத்தில், மாணவி ரெஜினாவுக்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? என்ற ேகாணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: