நெல்லை பேட்டையில் நள்ளிரவில் பயங்கரம் கட்டிட தொழிலாளி சரமாரி வெட்டி கொலை

*பிரபல ரவுடிக்கு வலை

பேட்டை : நெல்லை பேட்டையில் நள்ளிரவில் கட்டிடத் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள பேட்டை போலீசார் பிரபல ரவுடி மணியை தேடி வருகின்றனர்.

மேலும் அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை அடுத்த பேட்டைசேரன்மகாதேவி ரோடு பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டியின் மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (19).

கட்டிடத் தொழிலாளியான இவர் அங்குள்ள பகுதியில் நேற்று இரவு கட்டிடப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு திடீரென பைக்கில் வந்து இறங்கிய பேட்டை எம்ஜிஆர் நகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளபாண்டியின் மகனும் பிரபல ரவுடியுமான மணி (44) என்பவர் சுடலைமுத்து என்ற சுரேஷை சரமாரியாக வெட்டிவிட்டு பைக்கில் ஏறி தப்பிச்சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுடலைமுத்து என்ற சுரேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து விரைந்துவந்த பேட்டை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார், சுடலைமுத்து என்ற சுரேசின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மணி மீது கொலை, கொள்ளை, திருட்டு, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா விற்பனை, அடிதடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பேட்டை, சுத்தமல்லி, மதுரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன.

மேலும் பேட்டை காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்ற முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 முறை கைதாகி சிறை சென்றவர். அத்துடன் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி கிட்டப்பா என்பவரின் நெருங்கிய கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், சுடலைமுத்து என்ற சுரேஷ், கஞ்சா வியாபாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அத்துடன் கொலை சம்பவம் காரணமாக அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: