மண்டபம், கோயில்களில் கிடா விருந்து? கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்

 

பழநி, மார்ச் 29: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் கிடா விருந்து எதுவும் நடத்துகிறார்களா என தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதைதொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கவுள்ளது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் கிடா விருந்துகளை ஏற்பாடு செய்வது முன்பு வழக்கமாக இருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க துவங்கியதால் கடந்த தேர்தல்களில் இவை நிறுத்தப்பட்டன.

இந்த முறை அதேபோன்று தொண்டர்களை மொத்தமாக அழைத்து, தடபுடலாக கிடா விருந்து வைப்பதற்கு ஏதேனும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்கிறதா என்பதை கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வரும் மார்ச் 30ம் தேதி முதல் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் காலங்களில் ஏதேனும் மண்டபங்கள், கோயில்கள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் கிடா விருந்துகள் வைத்து தொண்டர்கள் அழைக்கப்படுகின்றனரா? அங்கு ஏதேனும் பரிசு பொருட்கள் தரப்படுகிறதா மற்றும் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: