திண்டுக்கல், மார்ச் 29: கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: உண்ணிகள் என்ற சிறிய பூச்சிகள், மரங்கள், செடிகள் உள்ள இடங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவை மாடுகளில் காதுகளின் உட்புறம் கழுத்து, வால், மடிப்பகுதி மற்றும் கால் இடுக்குகளில் காணப்படும். உண்ணிகள் மாடுகளின் உடம்பில் இருந்தால் அரிப்பை ஏற்படுத்தும். இதனால் மாடுகள் சரிவர தீவனம் உண்ணாமல் எடை குறைய வாய்ப்பு உண்டாகும். மேலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சில சமயங்களில் உண்ணிகள் அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சும் போது ரத்த சோகை ஏற்பட்டு மாடுகள் இறந்து போகவும் வாய்ப்புள்ளது.
உண்ணிகள் ரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி, சில வகை நோய் கிருமிகளையும் உடலுக்குள் செலுத்தி உண்ணி காய்ச்சல், பித்தப்பை நோய், ரத்த நீர்க்காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் மாடுகள் இறந்தால், அவற்றை வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பு உருவாகும். இதனை தடுக்க உண்ணி நீக்கி மருந்தில் ஏதாவது ஒன்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் நீரில் கலந்து மாடுகளை குளிப்பாட்ட வேண்டும். உண்ணி நீக்க மருந்துகளை மாடுகள் அடைக்கும் கொட்டகைகளில் உட்புறம் சுவர் மற்றும் தரையில் தெளிக்கலாம். கொட்டகையின் உட்புறம் மற்றும் மேற்புறத்தில் இருக்கும் துவாரங்களை அடைக்க வேண்டும்.
உண்ணி நீக்கி மருந்துகள் நச்சுத்தன்மை உள்ளவை என்பதால், கால்நடைகளின் உடல் புண், தீவனம் மற்றும் குடிநீரில் படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். சம அளவு தேங்காய் எண்ெணய் மற்றும் வேப்ப எண்ணெய் ஆகியவற்றை கலந்து, 2 நாட்களுக்கு ஒரு முறை மாடுகளின் உடம்பில் தடவினால், உண்ணிகளால் ஏற்படும் பாதிப்பை எளிய முறையில் தடுக்கலாம். இவ்வாறு கூறினர்.
