நோய் பாதிப்புள்ள ஆசிரியரை தேர்தல் பணிக்கு கட்டாய படுத்த கூடாது: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

 

சிவகங்கை, மார்ச் 29: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்குவதால் சுமார் 100 கி.மீக்கு அப்பால் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும்.

மேலும் தேர்தல் நடக்கவிருக்கும் முதல் நாள் அன்றுதான் வாக்குச்சாவடிக்கான பணியாணை வழங்குவதால் பணியாற்றும் வாக்குச்சாவடியை கண்டறிந்து பணிக்கு செல்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. மேலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பஸ் வசதியில்லாத குக்கிராமங்களில் உள்ளதால் வாக்குச்சாவடியை அடையாளம் காண்பது, தேர்தல் பணிக்கு செல்வதும், பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதும் பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே மண்டல அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல உரிய பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.

தேர்தல் பணியிலிருந்து தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும். 100சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்றை முறையாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: