30 ஆண்டுகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவுடன் மீன் துறைமுகம்

 

ராமேஸ்வரம், மார்ச் 29:பாம்பன் நாட்டுப் படகு மீனவர்களின் 30 ஆண்டுகால எதிர்பார்ப்பை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசுக்கு மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரை நாட்டுப்படகு மீனவர்களின் மிக முக்கிய மீன் வர்த்தக மையமாகும். இப்பகுதியில் நாட்டுப்படகுகள், வல்லம், பிளாஸ்டிக் படகு, தங்கு கடல் படகு என 300க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடித் தொழிலில் உள்ளன. இதில் 1500க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்களை வியாபாரம் செய்ய 50க்கும் மேற்பட்ட மீன் கம்பெனிகள் இயங்கி வருகிறது.

தீவு பகுதியில் இங்கு மட்டுமே பிரஷ் மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்பதால், எப்பொழுதும் காலையில் பாம்பன் வடக்கு கடற்கரை மீனவர்கள், வியாபாரிகள் என மிகுந்த பரபரப்பாகவே காணப்படும். மேலும் இந்த கடற்கரையை நம்பி மீனவப் பெண்கள் பலரும் கருவாடு உலர்த்தும் பணி மற்றும் கருவாடு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகின்றனர். ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் மீன் வர்த்தகத் தலங்களில் முக்கியமானதாக பாம்பன் வடக்கு கடற்கரை விளங்குகிறது. இவ்வாறாக விளங்கும் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல்கள், பலத்த சூறைக்காற்று, கடல் சீற்றங்களினால் மீனவர்கள் கடலில் நிறுத்தி வைக்கும் படகுகள் இயற்கை சீற்றத்தில் சிக்கி சேதம் அடையும்.

மேலும் கரையோர பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீன் கம்பெனிகளுக்குள் கடல் நீர் புகுந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இயற்கை சீற்ற காலங்களில் பெரும் துயரத்திற்கு ஆளாகும் நாட்டுப் படகு மீனவர்களின் கருத்தில் கொண்டு இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக மீனவ மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென அப்பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

மீனவர்களின் நலனை கருத்தில் கொண்ட தமிழக அரசு பாம்பன் வடக்கு கடற்பகுதியில் படகுகளை பாதுகாக்கும் வகையிலும், இயற்கை சீற்ற காலங்களில் கடற்கரையோரம் கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலும் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிட்டு ரூ.58.50 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவுடன் மீன் துறைமுகம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025 ஜுன் மாதம் கானொலி மூலம் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பாம்பன் வடக்கு கடற்பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய துறைமுகம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது பணிகள் நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளது.

இந்த தூண்டில் வளைவு துறைமுகம் 595 மீட்டர் தூரம். 1140 மீட்டர் சுற்றளவு, 120 மீட்டர் முகத்துவாரம் மற்றும் கரையோரத்தை பாதுகாக்க 250 மீட்டர் தடுப்பு சுவர் மேலும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் வலை பின்னும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 350க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க முடியும். கடற்கரை ஓரங்களில் ஏற்பட்டு வந்த கடல் அரிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்படும். மேலும் கடல் சீற்றம் காலங்களில் மீனவர் குடிசைகளுக்குள் கடல் நீர் புகுவது தடுக்கப்படும். இதனால் மீனவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்த இயற்கை சீற்ற துயரங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

பாம்பன் நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவர் எஸ்.பி ராயப்பன் கூறுகையில், பாம்பன் வடக்கு கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது எங்களின் 30 ஆண்டுகால எதிர்பார்ப்பு. ஒவ்வொரு புயல் காலங்களிலும் இப்பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் பெரும் துயரத்தை நஷ்டத்தை சந்தித்து வந்தனர். பல்வேறு அரசியல் கட்சியிரை சந்தித்து நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை கொடுத்தோம். எங்களின் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தோம்.

தற்போது தமிழக அரசு இந்தத் தூண்டில் வளைவை அமைத்துக் கொடுத்து இப்பகுதி நாட்டுப் படகு மீனவர்களின் துயரத்தை துடைத்துள்ளது. எங்களின் நலனை கருத்தில் கொண்ட தமிழக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவ மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

 

Related Stories: