வருசநாடு, மார்ச் 29: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் காண்டாமிருக வண்டு தாக்குதல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இது தொடர்பாக தென்னை விவசாயிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான காண்டாமிருக வண்டுகள் தென்னை மரங்களை தாக்கி வருகிறது. இதன் காரணமாக வழக்கமான உற்பத்தியை விட 15 முதல் 20 சதவீதம் வரை தேங்காய் உற்பத்தி குறையும்.
எனவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் முறையாக ஆய்வு மேற்கொண்டு காண்டாமிருக வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து கடமலைக்குண்டு தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு தென்னை விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று காண்டாமிருக வண்டு தாக்குதல் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறோம். மேலும் இந்த நோய் சம்பந்தமாக கடமலைக்குண்டு தோட்டக்கலை உதவி அலுவலரை அணுகவும் தெரிவித்துள்ளோம்’’என்றனர்.
