நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமல் சென்ற பணியாளர்கள் கலங்கிய குடிநீருடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை கடையாலுமூட்டில் பரபரப்பு

அருமனை, மார்ச் 29: கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து 3 வார்டுகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டியை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று பேரூராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியை தூய்மை செய்வததற்காக வந்தனர். ஆனால் நீரை மட்டும் வெளியேற்றிவிட்டு தூய்மை செய்யாமல் சென்றதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தண்ணீர் நிறம் மாறி கருமை நிறத்தில் வந்துள்ளது. அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவு மோசமாக இருந்ததால், இதனை பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கரு நிறத்தில் வந்த நீரை பாட்டிலில் அடைத்து கடையல் பேரூராட்சி அலுவலகம் முன்பு வந்து அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தூய்மைப்படுத்தாமல் மெத்தனமாக சென்ற பணியாளர்களை அழைத்து குடிநீர் தொட்டியை உடனடியாக முற்றிலும் தூய்மைப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து குடிநீர் தொட்டி தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பக்கத்தில் இருக்கும் பொது மக்களிடம் கையெழுத்து பெற வேண்டும் என செயல் அலுவலர் உத்தரவிட்டார்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் கடையல் பேரூராட்சி அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: