ஐபிஎல்லுக்கு புதுசு திறமைக்கு மவுசு

புதுடெல்லி: கடந்த 2025ல் நடந்த ஐபிஎல் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் புதிதாக களமிறங்கி அதிரடி ஆட்டங்களால் பலரை வியப்பில் ஆழ்த்தி புருவம் உயர்த்த செய்தனர். இந்நிலையில், இன்று துவங்கும் ஐபிஎல் போட்டிகளிலும் திறமை வாய்ந்த பல இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* பிரசாந்த் வீர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் பிறந்த 20 வயது வீரர் பிரசாந்த் வீரை, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 14.20 கோடிக்கு சென்னை அணி எடுத்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. சையத் முஸ்டாக் அலி போட்டிகளில், இவரது பந்து வீச்சு எகானமி ரேட், 6.45. பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 167க்கும் மேல்.
* சிவாங் குமார் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞரான சிவாங் குமார், இடது கை மணிக்கட்டு சுழல்பந்து வீச்சாளர். சுழல்பந்து வீச்சில், இவர் அரிய வகை பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தவிர, கீழ் ஆர்டரில் சிறந்த பேட்டராகவும் சிவாங் குமார் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* அகிப் நபி (டெல்லி கேபிடல்ஸ்)
ஜம்மு காஷ்மீர் அணிக்காக, 34 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அகிப் நபி (29), சிறப்பான பந்து வீச்சாளராக திகழ்கிறார். இவரது பந்து வீச்சு எகானமி ரேட், 7.74. ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 60 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தி உள்ளார்.
* அசோக் சர்மா (குஜராத் டைடன்ஸ்)
இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், அசோக் சர்மா (23) இடம்பெற்றிருந்தாலும், ஆடுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை. இம்முறை குஜராத் அணியின் இடம் பெற்றுள்ளார். சிறந்த பேக்அப் வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தேஜஸ்வி தஹியா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
டெல்லியை சேர்ந்த 23 வயது தேஜஸ்வி, மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். அவரது ஸ்டிரைக் ரேட், 168. சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் டெல்லி அணிக்காக அரை சதம் விளாசியுள்ளார்.
* நமன் திவாரி (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
இடது கை வேகப்பந்து வீச்சாளரான நமன் திவாரி, கடந்த 2024ல், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிகளின்போது அசத்தியவர். வலது கை பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
* அல்லா கஸன்ஃபர் (மும்பை இந்தியன்ஸ்)
ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல்லா கஸன்ஃபரின் (20) சுழல் பந்து வீச்சு புதிர் போடுவது போன்றே இருக்கும். எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர் இவர்.
* மிட்செல் ஓவன் (பஞ்சாப் கிங்ஸ்)
டாஸ்மேனியாவை சேர்ந்த 24 வயது இளைஞரான மிட்செல் ஓவன், பிக் பாஷ் போட்டிகளில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டங்களை ஆடி அசத்தியுள்ளர். இவரது ஸ்டிரைக் ரேட், 187க்கும் மேல்.
* ரவி சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை ஆடியுள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட், 173. ரயில்வே அணிக்காக, விதர்பா அணிக்கு எதிராக, 38 பந்துகளில் 68 ரன் விளாசி பலரது கவனத்தை ஈர்த்தவர்.
* ஜேகப் பெத்தேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
இங்கிலாந்தை சேர்ந்த 22 வயது இளஞ்சிங்கம் ஜேகப் பெத்தேல், உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக அட்டகாச சதம் விளாசி அசத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல்லில் எதிரணியினரை இவர் கலங்கடிப்பார்.
* நுவான் துஷராவுக்கு உடல்நிலை பாதிப்பு
பெங்களூரு: ஐபிஎல் போட்டிகள் இன்று துவங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவரான இலங்கை வீரர் நுவான் துஷாராவுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், ஐபிஎல்லில் துஷாரா பங்கேற்க தடையின்மை சான்றிதழ் அளிக்கவில்லை. அதன் காரணமாக, இன்று நடக்கும் போட்டியில் அவர் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

* ஐஓசி விதி அமல்படுத்த நியூசிலாந்து முடிவு
ஹோபர்ட்: வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் பிரிவில் திருநங்கையர் பங்கேற்பதை தடுக்கும் வகையில் புதிய விதிமுறையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளை மதிக்கும் வகையிலும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், ஐஓசிசியின் விதிகளை அமல்படுத்தப் போவதாக நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

Related Stories: