பெங்களூரு: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 19வது தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று உற்சாகமாக துவங்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவுடன் ஆடப்பட்டு வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் 19வது தொடர் இன்று துவங்கவுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
கடந்த ஆண்டு போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த தள்ளுமுள்ளு சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். அந்த சோக நிகழ்வின் எதிரொலியாக, நடப்பு ஐபிஎல் தொடரின் துவக்க விழா கொண்டாடப்படாது. மாறாக, தொடரின் நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படும் என கூறப்பட்டுள்ளது. இன்று களம் காணும் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதாரும், ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷணும் செயல்படுவர்.
நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. இருப்பினும், பந்து வீச்சில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது அந்த அணியின் பலவீனம். கடைசி கட்ட பந்து வீச்சில் பெங்களூரு சொதப்புவது வெற்றி வாய்ப்பை பாதிப்பதாக உள்ளது. பெங்களூரு அணியில் அதிரடி வீரர்களாக விராட் கோஹ்லி, பில் சால்ட், ரஜத் படிதார் கலக்கி வருகின்றனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், யாஷ் தயாள், ஜேகப் டஃபி முக்கிய பங்காற்றுவர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொறுத்தவரை, பவர்பிளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை பார்க்க முடிகிறது. பந்து வீச்சும் பாராட்டும்படி உள்ளது. அதேசமயம் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சில சமயம் ஐதராபாத் வீரர்கள் திணறி வருகின்றனர். ஐதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதால் அவருக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட்டு வரும் இஷான் கிஷண், சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பல அதிரடிகளை அரங்கேற்றி காட்டினார்.
அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, டாப் ஆர்டரில் ரன்களை குவித்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசன், லியாம் லிவிங்ஸ்டோன் பவர் ஹிட்டர்களாக கை கொடுத்து வருகின்றனர். ஹர்சல் படேல், ஜெய்தேவ் உனத்கட், சிவம் மாவி, ஷகிப் ஹுசேன், ஈஷன் மலிங்கா, சிவாங் குமார் போன்ற பந்து வீச்சாளர்களுடன் சிறந்த அணியாக ஐதராபாத் திகழ்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மெகா ஸ்கோர் விளாசி எதிரணியினரை மிரளச் செய்வது ஐதராபாத் அணியின் சிறப்பம்சம்.
* நேருக்கு நேர்
* சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 25 போட்டிகளில் மோதியுள்ளன.
* அவற்றில் பெங்களூரு 11 போட்டிகளிலும், ஐதராபாத் 13 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை.
* இப்போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 287 ரன்கள் விளாசியுள்ளது.
* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிகபட்சமாக 262 ரன்கள் எடுத்துள்ளது.
* சன்ரைசர்ஸ் அணியின் குறைந்த ஸ்கோர் 125.
* பெங்களூரு அணியின் குறைவான ஸ்கோர் 68.
* பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 8 போட்டிகளில், பெங்களூரு அணி 5 முறையும், ஐதராபாத் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
