இம்பேக்ட் வீரர் விதி 2027 வரை தொடரும்: ஐபிஎல் அதிகாரிகள் தகவல்

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் வீரர் விதி, வரும் 2027ம் ஆண்டு வரை தொடரும் என, ஐபிஎல் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் வீரர் விதி, கடந்த 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, போட்டியில் ஆடும் இரு அணிகளும் போட்டி துவங்கும் முன், தலா 5 மாற்று வீரர்கள் கொண்ட பட்டியலை அளிக்க வேண்டும். போட்டியின் துவக்கத்தில் அல்லது ஓவர் முடியும்போது, அல்லது விக்கெட் விழுந்தபின், ஏதாவது ஒரு வீரருக்கு மாற்றாக, இந்த 5 வீரர்களில் ஒருவரை போட்டியில் விளையாடும் அணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு, ஒரு பேட்டரையோ, அல்லது பவுலரையோ போட்டியின் இடையே அழைத்து ஆட வைக்க முடியும்.

போட்டியின்போது, ஏதாவது ஒரு மாற்று வீரரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வீரர் அனுப்பப்பட்டு அவருக்கு பதில் வேறு வீரர் பயன்படுத்தப்பட்டால், வெளியே சென்ற வீரரை மீண்டும் பயன்படுத்த முடியாது. இம்பேக்ட் வீரர் விதிக்கு, ரோகித் சர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இம்பேக்ட் வீரர் விதியால், அணியின் சமநிலை பாதிக்கப்பட்டு வெற்றி வாய்ப்பில் மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இம்பேக்ட் வீரர் விதி, வரும் 2027ம் ஆண்டு வரை தொடரும் என்றும், அதன்பின்னர் அது குறித்து மறுஆய்வு செய்து தக்க முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: