மயாமி ஓபன் டென்னிஸ்: அசராத சபலென்கா அட்டகாச வெற்றி; செமிபைனலில் நுழைந்தார்

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மயாமி நகரில், மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), அமெரிக்க வீராங்கனை ஹேலி பாப்டிஸ்டே (24) உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் மிக நேர்த்தியாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் அந்த செட்டையும் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய சபலென்கா, அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தான் நாட்டுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினா உடன் சபலென்கா மோதவுள்ளார். இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காஃப், செக் வீராங்கனை கரோலினா முஸோவா மோதவுள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.

* ஆடவர் ஒற்றையரில் லெஹெக்கா அபாரம்
மயாமி ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, செக் வீரர் ஜிரி லெஹெக்கா – ஸ்பெயின் வீரர் மார்டின் லாண்டலுஸ் லகேம்ப்ரா மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய லெஹெக்கா, 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ், அமெரிக்க வீரர் டாமி பால் மோதினர். இப்போட்டியின் துவக்கம் முதல் இரு வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், 3 செட்களும் டைபிரேக்கர்களில் முடிந்தன. கடைசியில், 6-7 (3-7), 7-6 (7-4), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஆர்தர் பில்ஸ் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related Stories: