சென்னை: மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த வீரப்பன் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடை, அதனை ஒட்டியுள்ள பார் ஆகியவற்றால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள் அந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.
அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு முன்பாக டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க வருகிறவர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இது அங்கு வரக்கூடிய பள்ளி குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எங்களது கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை. எங்களது வாதங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது. குறிப்பாக பொதுநல வழக்கிற்கான எந்தவித முகாந்திரமும் இதில் இல்லை. உங்களது தரப்பு வாதங்கள் மற்றும் கோரிக்கைகளை பார்த்தால் அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனையின் அறிவுறுத்தலின் பேரில் நீங்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக சந்தேகம் எழுகிறது, என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
