*26 இடங்களில் டாய்லெட் வசதியுடன் பஸ் ஸ்டாப்
*இரவை பகலாக்கும் 577 நியான் விளக்குகள்
பெரம்பலூர் : மாநிலத்தின் மையத்தில் உள்ள மிகச்சிறிய மாவட்டம் பெரம்பலூர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டத்தை தெற்கு- வடக்காக இரண்டாகப் பிரிக்கிறது.
சென்னையில் இருந்து திருச்சி வரை நான்கு வழிச்சாலையாக இந்த சாலை நவீன தரத்துடன் திகழ்கிறது.இதனால் திருச்சிக்கும் சென்னைக்கும் பெரம்பலூரில் இருந்து எளிதில் சென்றுவிட முடியும். பெரம்பலூரிலிருந்து கிழக்குநோக்கி அரியலூருக்கு செல்லும் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
அதேபோல் பெரம்பலூரில் இருந்து ஆத்தூருக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை ஒன்றும் உள்ளது. சென்னை, திருச்சி, அரியலூர், சேலம் மாவட்டங்களை இணைக்கும் இந்த சாலைகள் வேறு விதமாக இருந்தாலும், இப்படி ஒரு சாலை தமிழ்நாட்டில் இருக்கிறதா என ஆச்சர்யப்படும், அதிசயிக்கப்படும் படியான சாலை ஒன்று, இந்த மாவட்டத்தில் இருக்கிறதா எனக் கேட்போருக்கு விடையாகத்தான் பெரம்பலூர்- துறையூர் மாநில நெடுஞ்சாலைத் திகழ்கிறது.
சாலையோரம் என்றாலே அது திறந்தவெளி கழிப்பிடமாகத் தானே இருக்கும். ஆனால் இந்தத் துறையூர் சாலை மட்டும் 32 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் 13 பஸ் நிறுத்தங்களில் 26 பயணியர் நிழல் குடைகளுடன், ஆண் பெண் இருபாலருக்கமான கழிப்பறைகள் மற்றும் பஸ்டாப் மாடியில் சிண்டெக்ஸ் தண்ணீர் டேங்க் வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தானே ஏற்படுத்தும்.
இந்தசாலை தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதியைக் கொண்டு சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் ரூ.450 கோடி மதிப்பீட்டில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் 2/0 கிலோமீட்டர் முதல்- 32/0 கிலோமீட்டர் தூரம் வரையென 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதாவது துறையூர் புறவழிச்சாலை முதல் செஞ்சேரி புறவழிச் சாலை வரை, கடின புருவங்களுடன் கூடிய இரு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குரும்பலூர், நக்க சேலம் ஆகிய 2 பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இருவழிச் சாலையில் செஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே தொடங்கி, செட்டிகுளம் பிரிவு ரோடு, பாளையம், குரும்பலூர் புறவழிச்சாலை, ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், மங்கூன், மட்டப்பாறை, நக்கசேலம் புறவழிச் சாலை, டி. களத்தூர் பிரிவுரோடு என மொத்தம் 13 பஸ் நிறுத்தங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் தலா 26 என 52 கழிவறைகளுடன் கூடிய பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இருவழிச் சாலை, தமிழக முதல்வரால் அரியலூரில் இருந்தபடி பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கான அரசு விழாவின்போது, காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுலாத் தலங்களை நோக்கி சாலைகள் செல்வதை காட்டிலும், சாலையே சுற்றுலா தலம்போல் மாறி இருப்பது இங்குதான். மேலும் பஸ் நிறுத்தங்களின் அருகே தொலைதூரம் செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி டிரைவர்கள் ஓய்வெடுத்துச் செல்லவும் பேவர் பிளாக்கில் சாலை விரிவுபடுத்தித் தரப்பட்டுள்ளது.
இதனால் அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி சொல்லும் கனரக வாகனங்களும், நாமக்கல்லில் இருந்து சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்களும் இப்பகுதியில் ஓய்வுவெடுத்து செல்வது விபத்தைக் குறைக்க ஏதுவாகவே உள்ளது. ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் 32கிமீ தூரத்தை முகம் சுளிக்காமல் பயணிக்க இந்த இருவழிச் சாலை, சாதனை நாயகன் ஸ்டாலினின் ஆட்சிக்கு சாட்சியாகவே திகழ்கிறது.
