*6.48 லட்சம் மக்கள் பயன்பெறுவர்
*தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகள் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் மொத்தம் 6.48 லட்சம் பேர் குடிநீர் இணைப்பு பெற்று பயன்பெறுவர். இத்திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
‘நீரின்றி அமையாது உலகெனில் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப நீர் இவ்வுலகிற்கு முக்கியத்துவமாக உள்ளது. பூமியில் மனிதர்கள் உயிர் வாழவும், அன்றாட பயன்பாடுகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும், எல்லா வகையான உணவு உற்பத்திகளுக்கும் நீரே முக்கிய ஆதாரம்.
நீர் இல்லை என்றால் வாழவே இயலாது என்ற மக்களின் தேவையை அறிந்து ஒட்டன்சத்திரம் தொகுதியில் உயிர் நீர் இயக்கம் மூலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து வீடுகளுக்கும் காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதல் கடந்த 14.12.2022ல் வழங்கப்பட்டது.
இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, நெய்க்காரபட்டி, கீரனூர் பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 506 ஊரக உட்கடை கிராமங்களுக்கு கடந்த 16.12.2022ம் தேதி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை துவக்க ரூ.930 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த 28.05.2023ல் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மொத்தம் 43.69 எம்எல்டி
இதன்படி காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு நஞ்சை புகர் தடுப்பணையில் 2 நீர்உந்து நிலையம், 57 தரைமட்ட தொட்டி, 178 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி ஆகியவற்றின் மூலம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு 10.14 எம்எல்டி குடிநீர், தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு 11.58 எம்எல்டி குடிநீர், பழநி ஒன்றியத்திற்கு 9.20 எம்எல்டி குடிநீர், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு 6.44 எம்எல்டி குடிநீர், கீரனூர் பேரூராட்சிக்கு ரூ.25.55 எம்எல்டி குடிநீர்,
நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு ரூ.1.69 எம்எல்டி குடிநீர், இதில் சுத்திகரிப்பு 2.08 எம்எல்டி குடிநீரும் என மொத்தம் 43.69 எம்எல்டி குடிநீர் வழங்குவதற்கு திட்டம் தயார் செய்யப்பட்டு ஊரக பகுதிகளில் 5.12 லட்சம் பேர், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 1.36 லட்சம் பேர் என மொத்தம் 6.48 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
8,617 குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு
இத்திட்டத்தில் சின்னக்காம்பட்டி, காளாஞ்சிபட்டி, நவக்கானி, கள்ளிமந்தையம், போரூர், வாகரை, எவிக்சன் நகர், கொழுமங்கொண்டான், கீரனூர், நெய்க்காரபட்டி, அ.கலையம்புத்தூர், சரவணம்பட்டி, இந்திரா நகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மேல்நிலை மற்றும் உயர்மட்ட நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ரூ.112.64 கோடியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நகர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிதாக சுற்றுச்சுவருடன் கூடிய 32.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைக்கப்பட்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி 3 இடங்களில் அமைக்கப்பட்டும், குடிநீர் விநியோகம் செய்ய 92.17 கிலோ மீட்டர் குழாய்கள் அமைக்கப்பட்டும் நகராட்சியில் 8,617 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒட்டன்சத்திரம் தொகுதியில் குடிநீரை விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலை இருந்து வந்தது. தற்போது தொகுதி மக்களின் நிலை அறிந்து இந்த புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்,
உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், தீவிர முயற்சி எடுத்து திட்டத்தினை பெற்று தந்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கும் தொகுதி மக்கள் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
தலைமுறைகள் நிலைத்து நிற்கும்
இதுகுறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த கால ஆட்சியில் பொதுமக்கள் குடம் ரூ.10க்கு குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார்.
அதன்படி ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்போது துவங்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் போது தனிநபர் ஒன்றுக்கு நகராட்சி பகுதிகளில் 135 லிட்டரும், பேரூராட்சி பகுதிகளுக்கு தனிநபர் ஒன்றுக்கு 90 லிட்டரும், ஊரக பகுதிகளுக்கு தனிநபர் ஒன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னையே இல்லாத வகையில் தலைமுறைகள் நிலைத்து நிற்கும் கூட்டுக்குடிநீர் திட்டமாக இத்திட்டம் அமையும். இதன் முதல்கட்ட பணிகள் முடிவடைந்து கடந்த 13.2.2026ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
