*மழைக்கு காத்திருக்கும் தோட்டங்கள்
வால்பாறை : கோவை மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதியான வால்பாறையில், அண்மை காலமாக நிலவும் கடும் வெயில் காரணமாக தேயிலை மகசூல் கணிசமாக குறைந்துள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வால்பாறை மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தேயிலை உற்பத்தி பெருமளவில் காலநிலையை பொறுத்தே உள்ளது.
வழக்கமாக மிதமான வெப்பநிலை மற்றும் அவ்வப்போது கிடைக்கும் மழையால், மட்டுமே தழை வளர்ச்சி சீராக இருக்கும். ஆனால், கடந்த சில வாரங்களாக நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தேயிலை செடிகளின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது.
புதிய இலை முளைப்பு குறைந்ததால், தினசரி மகசூல் அளவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, வால்பாறை பகுதிகளில் கோடைகால மழையை தோட்ட நிர்வாகங்களும், தொழிலாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
மழை கிடைத்தால், அடுத்த சில வாரங்களில் தேயிலை மகசூல் மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் பசுமையாக காணப்பட்டாலும் மகசூல் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வால்பாறை தேயிலை தோட்டங்கள் முழுவதும் தற்போது காலநிலை மாற்றத்தை கவனித்து கொண்டே செயல்பட்டு வரும் நிலை நீடிக்கிறது.
