இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற குழந்தைகள் மீது கார் மோதல்

*சிகிச்சையில் இருந்த டிரைவர் தலைமறைவு

சூலூர் : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தட்டாம்புதூரை சேர்ந்த பிரபு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மகன் மற்றும் மகளை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வேகமாக வந்த கார் திடீரென எதிரே வந்த வேன் மற்றும் பிரபுவின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பிரபு மற்றும் அவரது குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் 3 பேரும் தப்பினர். கருமத்தம்பட்டியை சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான காரை நாமக்கல்லை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். காரை ஓட்டி வந்த விக்னேஷ் குமார் அதிக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த கார் ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த நேற்று கருமத்தம்பட்டி போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கார் ஓட்டுநர் விக்னேஷ் குமார் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: