சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது வன செயல்விளக்க மையம் பூங்காவுக்கு வனத்துறை பூட்டு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவால், வன செயல் விளக்க மைய பூங்காவுக்கு வனத்துறையினர் பூட்டு போட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும்போது, அந்நேரத்தில் ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். கடந்த 2025 ஆண்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும்.

அதன்பின் அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாதம் இறுதி வ ரையிலும் வடகிழக்கு பருவமழை என அடுத்தடுத்து தொடர்ந்து பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல மாதமாக பெய்த மழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில், கடந்த ஜனவரி மாதம் வரையிலும் தண்ணீர் அதிகளவு ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனால், பல மாதமாக சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகம் வந்திருந்தனர். ஆனால் அதன்பின் மழை இல்லாததால், பிப்ரவரி மாதம் முதல் கவியருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைய துவங்கியது.

அருவிக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்ததால், பெரும்பகுதி வெறும் பாறையானது. கவியருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவு மற்றும் வறட்சி துவக்கம் காரணமாக, சில வாரத்திற்கு முன்பு இருந்து கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டது.

இருப்பினும், ஆழியார் வரும் சுற்றுலா பணிகள் பலரும், கவியருக்கு செல்ல வாகனங்களில் வருகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக, வனத்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர்.

விடுமுறை நாட்களில் மட்டும் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருப்பதால், அச்சமயத்தில் வன சோதனை சாவடியருகே ஆனைமலை புலிகள் காப்பகம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வன செயல் விளக்க மையமான வனத்துறை பூங்காவுக்கு சென்று வந்தனர்.

ஆனால், கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்தது. இதனால், வனத்துறை பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. சில நாட்களில் பயணிகளின்றி வெறிச்சோடிய இடம்போல் காணப்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர், வன செயல் விளக்க மைய பூங்காவுக்கு பூட்டு போட்டுள்ளனர். இன்னும் சில வாரங்களில் பள்ளி இறுதியாண்டு தேர்வு நிறைவடைந்தவுடன், சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வன பூங்கா பகுதியை திறந்து பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: