தொடர் விடுமுறையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காரைக்கால் : தொடர் விடுமுறையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடுமுறை காலங்களிலும், விஷேச நாட்களையொட்டி தொடர் விடுமுறையை கொண்டாடி மகிழுவதற்காக பல்வேறு சுற்றுலா மையங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து வி்ட்டதால் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

மேலும் அண்டை மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் காரைக்கால் கடற்கரைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதனால் கடற்கரை திட்டுகளில் குழந்தைகளுடன் விளையாடியும், பூங்கா, கலங்கரை விளக்கம், பொழுதுபோக்கு விளையாட்டு மைதானங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும் அரசலாறு படகு குழாமில் பொதுமக்கள் படகு சவாரி செய்தனர். குதிரை ஏற்றம் சவாரி செய்து மகிழ்ந்தனர். காரைக்கால் கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் விளையாடி தங்கள் உறவினருடன் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால் கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: