‘கோடையிலும் இனி பற்றாக்குறை இருக்காது’ நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் விரிவாக்க பணி தீவிரம்

*அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க கூட்டுக்குடிநீர் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ளன. இந்த வார்டுகள் முழுவதும் 13.87 ச.கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது.

1948ல் இருந்து, பொள்ளாச்சி நகரில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆழியாற்றில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுத்து பிரதான குழாய் மூலமாக, நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள நீரேற்று நிலையத்தில் உள்ள 3 குடிநீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.

இந்த நீரேற்று நிலையங்களில் சேகரிக்கப்படும் குடிநீரானது நகர பகுதியில் அமைந்துள்ள 9 நீர்த்தேக்க மேல்நிலை தொட்டிகளுக்கும், 2 தரைமட்ட தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் மேலும் அதிகரிக்கவும், விரைவில் சீரான குடிநீர் விநியோகிக்கவும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24,50 கோடிக்கு குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அம்பராம்பாளையத்தில் புதியதாக 26 எம் எல் டி கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியும்.

அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பழைய 6 போல் கம்பங்களுக்கு பதிலாக 22 கேவி மின் பெட்டகம் அமைக்கும் பணியும் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பழைய 75 எச்பி மின் மோட்டாருக்கு பதிலாக, 100 ஹெச்பி மின் மோட்டார் அமைக்கும் பணியும் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டார் கட்டிடத்திற்கு பதிலாக புதிய பம்பு ரூம் கட்டும் பணியும் பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் தரைமட்ட தொட்டிக்கு பதிலாக புதிய தரைமட்ட தொட்டி கட்டும் பணி மற்றும் தலைமை நீரேற்று நிலையத்தை சுற்றிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்க சுற்றுச்சுவர் கட்டும் பணியும் மார்க்கெட் ரோடு முதல் மகாலிங்கபுரம் வரை, பழைய சிமெண்ட் குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய் பதிக்கும் பணியும் உள்ளிட்டவை உள்ளிட்டவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பணிகள் கடந்த நவம்பர் மாதம் துவக்கப்பட்டது. தற்போது விறுவிறுப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடையும்போது பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கப் பெறுவதுடன், கோடை காலங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் கூடுதல் லிட்டர் குடிநீர் கிடைக்க ஏதுவாக இருக்கும்.

பல ஆண்டுகளாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றி கொடுத்துள்ளார். மக்களுக்கு தேவையானவற்றில் முக்கியமானதாக கருதப்படும் தாகம் தீர்க்கும், குடிநீர் திட்டத்தை புதுப்பித்த தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரியில் தரப்பில் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகராட்சி 1920ல் நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு, 1983ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 36 வார்டுகள் உள்ளடக்கி 13.87 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.

பொள்ளாச்சி நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆழியாற்றினை ஆதாரமாக கொண்டு துவங்கப்பட்ட திட்டத்தில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதி குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைக்க கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

அம்பராம்பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் சேகரிக்கப்படும் குடிநீரானது, நகர பகுதியில் அமைந்துள்ள 9 நீர்த்தேக்க மேல்நிலை தொட்டிகளுக்கும், 2 தரைமட்ட தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு 110 எல்பிசி டி வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு கட்டுமான பணிகள் கட்டப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆவதால் கட்டத்தின் வலிமை இழந்து அதன் செயல்திறன் குறைந்துள்ளது.

மேலும், கட்டித்தின் அநேக இடங்களில் பழுதுகள் ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து இயக்க இயலாத நிலை உள்ளது. எனவே, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24.50 கோடிக்கு,பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் கிடைக்க ஏதுவாக இருக்கும்\” என தெரிவித்தனர்.

அதுபோல, அம்பராம்பாளையம் அருகே கடந்த 1998ம் ஆண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. அங்குள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து பிரதான குழாய் மூலமாக பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, குடிமங்கலம் ஒன்றிங்களில் உள்ள கிராமப்பகுதிளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், ஏற்கனவே இருந்த பழைய கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஆன குழாய்கள் பயன்பாடு சுமார் 27ஆண்டுக்கு மேல் கடந்ததால், அதில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு கடைகோடி மக்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில், ரூ.51 கோடியில் மறு சீராய்வு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டது. அப்பணிகள் நிறைவடைந்த பின்னர், மறுசீராய்வு செய்யப்பட்ட பிரதான குழாய் வழியாக குடிநீர் விநியோக பணி இருக்கும் எனவும், இதனால் நகரம் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் அதிக அளவில் பயன்பெற உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: