*ரூ.3.50 கோடிக்கு வர்த்தகம்
சேந்தமங்கலம் : தேர்தல் நடத்தை விதிமுறையால், புதன்சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்தது. விலையும் சரிந்ததால் ரூ.3.50 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம்.
திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை சந்தை நடைபெறும். இந்த சந்தையில் மாடுகளை வாங்க, விற்க ஆந்திரா, கர்நாடகா, கேரளம், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து கறவை மாடுகள், இறைச்சி மாடுகள், காளை மாடுகள் என அனைத்தும், வழக்கத்தை காட்டிலும் குறைவாக விற்பனைக்கு வந்திருந்தது.
பணம் கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால் கர்நாடகா, கேரளம், ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க குறைவான வியாபாரிகளே வந்திருந்தனர்.
இதனால் வெளி மாநிலங்களுக்கு மாடுகள் விற்பனை குறைந்தது. கேரளாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், இறைச்சி மாடுகளை வாங்க குறைவான வியாபாரிகளே வந்திருந்தனர்.
இதனால் சந்தையில் மாடுகளின் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ரூ.25 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ.47 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ.19 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றை சந்தையில் ரூ.3.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
