நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்

*தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். செயலாளர் குலசேகரன் வரவேற்றார்.

மாநில துணைத் தலைவர் தாமஸ், இணை செயலாளர் ராஜாமுகமது, அல்துல்ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் கூறியதாவது: மே மாதம் 5ம் தேதி திருவாரூரில் 43வது வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாடு நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் மார்க்கெட் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் முடிக்கப்படாத நிலையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு முதல்வரிடம் எடுத்து கூறப்படும். நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள மாஸ்டர் பிளான் சட்டத்தால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பல ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் செக்‌ஷன் 17 நிலம் பிரச்னை உள்ளது. அங்கு 5 லட்சம் குடியிருப்புகள் உள்ளன.

விவசாயிகள் பயன்படுத்தி வரும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வனப்பகுதிகளாக அறிவிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுக்க இருக்கிறது.

தொரப்பள்ளி முதல் மேல்காமனி வரை ஒரு மேம்பாலம் அமைத்தால், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் வந்து செல்வதற்கு மிகவும் ஏற்றதாக அமையும். மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தால், வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் அடைவார்கள்.

அதேசமயம் பொருளாதாரமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரடியாக எங்களது சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். உறுதியாக அதை செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையோடு இன்னும் பல்வேறு பிரகடன தீர்மானங்களை மே மாதம் 5ம் தேதி நடக்கும் மாநாட்டிலே எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: