திருப்பூர், மார்ச் 24: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கடந்த 2 நாட்களாக முன்னாள் மாணவர்கள் ஹாக்கி கோப்பை போட்டி நடந்தது. இதில் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் ஹாக்கி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சூப்பர் நோவா ரெட், மார்சன் கிரீன், காஸ்மிக் புளூ மற்றும் ஆஸ்ட்ரோ மஞ்சள் நான்கு அணிகளாக பிரிந்து லீக் சுற்றுகளின் அடிப்படையில் விளையாடினர்.
இதில் அதிக புள்ளிகளைப் பெற்று மார்சன் கிரீன் அணி முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு அளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கலந்து கொண்டார். ஹாக்கி பயிற்சியாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்து வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
