டெல்லியில் கலந்துரையாடல் நடந்தாலும் சென்னையில்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: விமானநிலையத்தில் டிடிவி.தினகரன் உறுதி

மீனம்பாக்கம்: தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 234 தொகுதிகளிலும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவது குறித்து டெல்லியில் கலந்துரையாடல் நடந்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய டிடிவி.தினகரன் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

புதுடெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு, டெல்லியிலிருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை விமானநிலையம் வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் ஆகியோருடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது குறித்து கலந்துரையாடினேன்.

சென்னையில்தான் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இன்னும் 2 நாட்களில் டெல்லியிலிருந்து தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார். இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம் போன்ற தேர்தல் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: