கிரிப்டோ கரன்சி முதலீடு ரூ.30 கோடி மோசடி செய்த சென்னை நிறுவனம் மீது வழக்கு

 

சென்னை: அதிக வட்டி மற்றும் லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், சென்னையில் கிரிப்டோ கரன்சி முதலீடு என்ற பெயரில் சுமார் 30 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘டி.எப்.டி பிளாக்செயின் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், ஆறு வகையான கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15% முதல் 20% வரை நிலையான வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளது. இதனை நம்பி நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் சுமார் 20 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். வாக்குறுதி அளித்தபடி வட்டிப் பணமோ அல்லது அசல் தொகையையோ தராமல் நிறுவனம் காலம் கடத்தியுள்ளது. இது குறித்து 2023ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் சென்றன. ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியபோது, நிறுவன இயக்குநர்கள் தலைமறைவாகினர். தொடர்ந்து, நிறுவனங்கள் பதிவுத் துறை நடத்திய விசாரணையில், அந்நிறுவனம் கம்பெனி சட்டத்தை மீறிச் செயல்பட்டதும், முறையான அனுமதியின்றி முதலீடுகளை திரட்டியதும், கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரிக்காததும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் ஜான் சார்லஸ் ரத்தினக்கல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா சாலை, திருநின்றவூர், மேற்கு தாம்பரம் மற்றும் ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் இந்த நிறுவனம் கிளைகளைக் கொண்டு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், உரிய ஆதாரங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இயக்குநர் மற்றும் நிர்வாகிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆருத்ரா கோல்டு, நியோ மேக்ஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளை தொடர்ந்து, கிரிப்டோ கரன்சி பெயரில் நடைபெற்றுள்ள இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: