பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் குடோனில் பதுக்கிய, காரில் கடத்திய 749 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வணிக வளாகங்களில் மட்டுமின்றி, வாகன சோதனை மூலமாகவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், சட்டவிரோதமான செயல்களை தடுப்பதில் போலீசார் முனைப்புடன் உள்ளனர்.
இதில் நேற்று, கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மலையாண்டிபட்டிணம் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது. அங்குள்ள ஒரு குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், குடோனில் சோதனை செய்தபோது அங்கு மொத்தம் 519 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்தது ஆனைமலையை சேர்ந்த வின்சென்ட் விக்டர் (42) என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் நேற்று கரியாஞ்செட்டிபாளையம் பகுதியில் கோட்டூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கட்டுகட்டாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மொத்தம் 230 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தொண்டாமுத்தூரை சேர்ந்த பவுன்ராஜ் (39), கோட்டூரை சேர்ந்த பால்ராஜ் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 749 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்த போலீசாரை, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பாராட்டினார்.
