திசையன்விளை: திசையன்விளை அருகே அதிகாலையில் காரில் எரிந்த நிலையில் சென்னையை சேர்ந்த தம்பதி, 2 குழந்தைகளுடன் இறந்து கிடந்தனர். அவர்கள் பெட்ரோல் டேங்கை திறந்து தீவைத்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைகுளத்திலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இருந்து 300 மீட்டர் பக்கவாட்டில் தரிசு நிலத்தில் நேற்று அதிகாலை 6 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. காரில் முற்றிலும் எரிந்த நிலையில் 4 பேரின் உடல்கள் கருகி கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதைதொடர்ந்து 4 பேரின் கருகிய உடல் பாகங்களை வாளியில் அள்ளி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் அருகே 2 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் 2 மற்றும் ஒரு லிட்டர் கேன்கள் 3, அதே போல ஒரு மதுபாட்டில் கிடந்தது. அதில் ஒரு பாட்டிலில் மட்டும் பாதியளவு தண்ணீர் இருந்தது. மாவட்ட எஸ்பி பிரசண்ணகுமார் தலைமையில் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கார் முழுவதும் எரிந்து விட்டதால் அதன் பதிவெண் கூட தெளிவாக தெரியவில்லை.
இதையடுத்து காரில் இருந்தவர்கள் யார்? என்பதை அறிய காரை கவிழ்த்து அதன் ‘சேஸ்’ எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கினர். இதில், கருகி உயிரிழந்தது காரின் உரிமையாளரான சென்னை நந்தம்பாக்கம், பெரியார் நகர், பவானியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ரபி (45), அவரது மனைவி செய்யது நஸ்ரீன் பாத்திமா (40), மகள் ஆப்ரின் பாத்திமா (15), மகன் முகமது ஹாஜா (13) ஆகியோர் என்பது தெரியவந்தது.
முகமது ரபி, மனைவி மற்றும் மகன், மகள்களுடன் காரில் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு லைலத்துல்கதிர் என்ற 27வது ரம்ஜான் நோன்பு நாளான நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு வந்துள்ளார்.
அங்கு சஹர் உணவருந்தி விட்டு காரில் வெளியே சென்று இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சென்னையில் உள்ள தனியார் கார் நிறுவனம் ஒன்றில் முகமது ரபி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடன் பிரச்னையில் சிக்கிய அவர் அங்குள்ள தனது வீட்டை விற்றுள்ளார். பின்னர் வேலையை விட்டு விட்டு குடும்பத்துடன் நெல்லைக்கு குடிபெயர்ந்தார். இவரது மனைவியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி என தெரிகிறது. முகமது ரபி கடன் பிரச்னையால் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முகமது ரபி குடும்பத்துடன் ஆற்றங்கரை பள்ளிவாசல் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பி வந்த அவர் சாலையில் பக்கவாட்டில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் காரை நிறுத்தி, பெட்ரோல் டேங்க்கை திறந்து தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் காரை ஓட்டி வந்த முகமது ரபி மது அருந்தியுள்ளார். தலையை ‘ஸ்டியரிங்கில்’ சாய்த்தவாறு அவரது உடல் எரிந்த நிலையில் இருந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி தந்த முகமது ரபி
முகமது ரபி நேற்று காலை தனது குடும்பத்துடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அங்கு பிரார்த்தனைக்கு பின்னர் மீண்டும் காரில் ஏறியுள்ளனர். அப்போது பள்ளிவாசல் வெளியே முகமது ரபி மட்டும் காரில் இறங்கிச் சென்று ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக துணி வாங்கிக் கொடுத்தது மட்டுமின்றி, அவர்களுக்கு சாப்பாடும் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிச் சென்ற அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* 2 மாதங்களாக திசையன்விளையை சுற்றிய கார்
கடந்த 2 மாதங்களாக திசையன்விளை அருகே கரைசுத்துபுதூர், ஆவுடையார்குளம், ஆற்றங்கரை பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் இந்த கார் சுற்றி வந்துள்ளதை சிலர் பார்த்துள்ளனர். டோல்கேட்டிலும் காரின் எண் பதிவாகியுள்ளது. பல முறை நாங்குநேரி டோல்கேட்டை கடந்து சென்றுள்ளது. இதனால் அடிக்கடி இவர்கள் குடும்பத்துடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
* தாயை கட்டியணைத்தப்படி எரிந்து கிடந்த குழந்தைகள்
கார் முன்சீட்டில் டிரைவர் இருக்கையில் முகமது ரபி எரிந்த நிலையில் கிடந்தார். பின் சீட்டில் நஸ்ரீன் பாத்திமா மற்றும் அவரது மகள் ஆப்ரின் பாத்திமா, மகன் முகமதுஹாஜா ஆகியோர் எரிந்த நிலையில் கிடந்தனர். இதில் 2 குழந்தைகளும் தாயை கட்டிப் பிடித்தவாறு எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது பரிதாபமாக இருந்தது.
* தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்ததால் கடன்
திசையன்விளை அருகே காருக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட முகமது ரபி பற்றி சென்னையில் உள்ள அவரது தந்தை சிக்கந்தரை தொடர்பு கொண்டு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட அவர் இன்று காலை திசையன்விளை வருகிறார். முகமது ரபியின் மனைவி நஸ்ரின் பாத்திமா உடலை அவரது தாய்மாமா நேரில் பார்த்து அடையாளம் காட்டினார். முகமது ரபி சென்னையில் தனியார் கோல்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளாகவே, நந்தம்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டை விற்று விட்டு, நெல்லைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து குடும்பத்தினருடன் தங்கியவர், இரவில் அங்கிருந்து காரில் குடும்பத்துடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.
