வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு மறுத்ததால் 5 மாத பெண் குழந்தையை மாமனார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை கிணற்றில் வீசிய நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே ராமச்சந்திரம் பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (30). இவரது மனைவி சத்தியவாணி (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த சத்தியவாணிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன் 2வதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தீபிகா என பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில், இவர்களது வீட்டின் அருகே உள்ள கிணற்றில், நேற்று காலை தீபிகாவின் சடலம் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்பவர்கள், வேப்பனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமிழரசன், சத்தியவாணி மற்றும் தமிழரசனின் தந்தை ராஜன் (56) ஆகியோரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதில், ராஜனுக்கும் சத்தியவாணிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில் தமிழரசன் வேலைக்கு செல்லும் நேரத்தில், ராஜனும் சத்தியவாணியும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த தமிழரசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில்தான் சத்தியவாணிக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 5 மாதங்களே ஆனநிலையில் சத்தியவாணியை ராஜன் அடிக்கடி உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு சத்தியவாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதேபோல் நேற்றுமுன்தினம் இரவும், சத்தியவாணியை ராஜன் உறவுக்கு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜன், 5 மாத குழந்தை தீபிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியவாணி, போலீசில் மாட்டி கொள்ளக்கூடாது என எண்ணி, குழந்தையின் உடலை அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் குழந்தையின் உடல் மிதந்ததால் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் ராஜன், சத்தியவாணி ஆகியோர் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜன், சத்தியவாணி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: