சென்னை: சிறுநீரக விற்பனை மோசடியில் தன்னை திட்டமிட்டு இணைத்து சமூக வலைத்தளங்களில் பேசி வரும் நடிகர் அருண் ராஜன், தவெக நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடிகை ஜூலி அளித்துள்ள புகார் மனுவில் கூறியதாவது: நான் சென்னை வளசரவாக்கம் ராமகிருஷ்ணன் நகரில் வசித்து வருகிறேன். யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற டிஜிட்டல் மீடியா தளங்களில் என் மீது வேண்டுமென்றே பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். நான் நடிகர் விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி’ பற்றி எனது கருத்தை வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டேன்.
சிறிது நேரத்தில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி தவெக நிர்வாகியான கார்த்திக்குமார் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டு எனக்கு எதிராக அவதூறு பரப்ப தொடங்கினார். அதன் பிறகு கடந்த 25ம் தேதி நெல்சன் என்பவர் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டு அவதூறு பரபப்புகிறார். பிறகு கார்த்திக் குமார் மீண்டும் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் புகைப்படங்களை வைத்து ரீல்சுகளை வெளியிட்டார். நான் ஒரு தரகர் என்றும், என்னை கைது செய்ய வேண்டும் என்றும் பகிரங்கமாக பேசினார். எனது வீட்டில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் நடந்ததாவும், சிறுநீரக பரிவர்த்தனைகள் ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
கடந்த 6ம் தேதி நெல்சன் என்பவர், மீண்டும் நான் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டதாக என் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பெலிக்ஸ் ஜெரால்ட் என்ற யூடியூபரும் தவெக நிர்வாகியான அவர், ‘ரெட்பிக்ஸ்’ யூடியூப் சேனலில் கார்த்திக் குமாருடன் நேர்காணல் நடத்தி அதில் பல தவறான மற்றும் அவதூறு தகவல்களை வெளியிட்டார். அதில், சிறுநீரக விற்பனை பரிவர்த்தனையை நான் ஏற்பாடு செய்ததாக பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார். எனக்கு முன்பு அறிமுகமான ஷர்மியா, தனது கணவர் பூவரசனுடன் எனது சில தனிப்பட்ட புகைப்படங்களை எனது அனுமதியின்றி சட்டவிரோதமாக பகிர்ந்து கொண்டார். பூவரசன் தவெக நிர்வாகியாக உள்ளார்.
நடிகர் அருண் ராஜன் என்பவரும் சிறுநீரக விற்பனை குறித்து எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். எனவே எனது புகழை கெடுக்கும் வகையில் சிறுநீரக விற்பனையில் நான் ஈடுபட்டதாக சமூக வலைத்தள பக்கங்களில் அவதூறு பரப்பி வரும், யூடியூபரான தவெக நிர்வாகி நெல்சன், கார்த்திக்குமார், பெலிக்ஸ் ஜெரால்ட், சரத், ஷர்மியா, பூவரசன், நடிகர் அருண்ராஜன், ராஜூ உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எதிராக பரப்பப்பட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். இவ்வாறு நடிகை ஜூலி புகார் அளித்துள்ளார்.
