ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது

சென்னை: ஊட்டி, விருதுநகரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.17 கோடி மதிப்பிலான தங்க, வைர, பிளாட்டி நகைகள் சிக்கின. முறையான ஆவணம் இல்லாததால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓசூரில் ரூ.2.34 கோடி ரொக்கம் சிக்கியது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் அரசியல் கட்சியினர் கொண்டுச்செல்கின்றனரா? என வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது, ஊட்டி-குன்னூர் சாலையில் ஆர்டிஓ அலுவலகம் அருகே ஊட்டி நகருக்குள் வரும் வாகனங்களில் சோதனை நடந்தது. அப்போது, ஒரு வாகனத்தில் ஒரு பெட்டியில் ஏராளமான தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகள் ஊட்டியில் உள்ள பல்வேறு கடைகளுக்குள் கொண்டுச்சென்றது தெரியவந்தது. அந்த நகைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தங்க நகைப்பெட்டியுடன் அந்த வாகனம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. நகைப்பெட்டியை எடுத்து வந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

விருதுநகர் சூலக்கரை அருகே நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.14 கோடியே 24 லட்சத்து 34 ஆயிரத்து 531 மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை மதுரையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலம் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால் இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ஜான்சன் தேவசகாயம், உதவி தேர்தல் அலுவலர் ராஜாமணி முன்னிலையில் ஒப்படைத்தனர். சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் சோதனைச்சாவடி அருகே நடந்த சோதனையில், மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற காரில் ரூ.90 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 70 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓசூர் சட்டமன்ற தொகுதி கர்நாடக மாநிலத்தை ஒட்டி உள்ளதால், அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி காவல் சோதனைச்சாவடி பகுதியில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று இந்த சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் வந்த வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்த அனுமந்தராயா என்பவர் பெங்களூரு ஜேபி நகர் பகுதியில் உள்ள ஹிட்டாச்சி கேஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து, ஓசூர் வஉசி நகர், ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் உள்ள 2 வங்கி ஏடிஎம்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரு சந்தாபுரம், காந்தி நகரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களுக்கு நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. தகவலறிந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபிறகு, பணம் மற்றும் வாகனத்தை திருப்பி ஒப்படைக்குமாறு போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ரூ.2 கோடியே 34 லட்சத்துடன், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

* ரூ.30 லட்சம் ‘சில்லரை’ காசுடன் லாரி சிக்கியது
தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் பென்னிகுக் மண்டபம் அருகே பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.30 லட்சம் சில்லரை காசுகள் இருந்தது. விசாரணையில், அவை கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியது என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனம் ஒன்று சபரிமலை தேவஸ்தான போர்டு மூலம் இந்த சில்லரை காசுகளை பெற்று தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் கொடுத்து நோட்டுகளாக மாற்றுவதற்காக எடுத்துக் கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அவற்றை விடுவித்தனர். எனினும் ஆவணங்கள் சரி பார்ப்பிற்காக வருமானவரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: