புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தய இணையதளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 300 இணையதளங்கள், செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம், பந்தய தளங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,சட்ட விரோதமாக செயல்பட்ட 300 ஆன்லைன் சூதாட்டம், பந்தய இணையதளங்கள், செயலிகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.
முடக்கப்பட்ட தளங்கள் மற்றும் செயலிகள், ஆன்லைன் விளையாட்டுப் பந்தயத் தளங்களான ஸ்லாட்டுகள், ரவுலட், லைவ் டீலர் டேபிள்களை வழங்கும் ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் பி-டு-பி ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்கா சூதாட்ட நெட்வொர்க்குகள், மற்றும் கேசினோ விளையாட்டுச் செயலிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதுவரை சுமார் 8,400 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இணையவழி சூதாட்டச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே முடக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
