லிப்டில் சிக்கி ஒருவர் பலி மேற்குவங்க அரசியல் களமாகும் ஆர்.ஜி. கர் மருத்துவமனை

கொல்கத்தா: பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு மேற்குவங்க அரசியல் களத்திற்குள் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனை தானாகவே நுழைந்து விட்டது. அந்த விவகாரத்தை பா.ஜ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கையில் எடுத்து முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். தற்போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தாயார், பா.ஜ சார்பில் மேற்குவங்க தேர்தலில் சீட் கேட்டு மனு செய்து இருக்கிறார். இந்த சூழலில் நேற்று ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் லிப்டில் சிக்கி ஒருவர் பலியானார். இதுவும் தற்போது மேற்குவங்க அரசியலில் அனலை ஏற்படுத்தி உள்ளது.

லிப்டில் சிக்கி பலியான நபர் தனது நான்கு வயது மகனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்திருந்தார். லிப்டில் சென்றபோது அவர் சிக்கிக்கொண்டார். லிப்டில் இருந்து மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்ததாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலமே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆனால் இந்தச் சம்பவத்தை கொலை என்று வர்ணித்த பாஜ சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ மேற்குவங்க சுகாதார அமைப்பில் நிலவும் ஊழலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம். சுகாதாரத்துறையின் பொறுப்பாளராக இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, சுகாதாரச் செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகம் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோரே இந்த உயிரிழப்பிற்குப் பொறுப்பு’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: