ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையில்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈரான் நாட்டின் தஸ்னிம் செய்தி நிறுவனம் உள்ளிட்ட சில ஊடகங்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து தெளிவற்ற தகவல்கள் இருப்பதாக செய்திகளை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.
குறிப்பாக, கடந்த 14ம் தேதியன்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போல தெரிந்ததால், அது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என பலரும் பதிவிட்டு வந்தனர். மேலும், அவரது மகன் யாரீர் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் அமைதியாக இருந்ததும் இந்த வதந்திகள் காட்டுத்தீயாக பரவ காரணமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது எழுந்துள்ள அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அரசு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை அவரே நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், ‘இவை அனைத்தும் முற்றிலும் பொய்யான செய்திகள்; பிரதமர் நலமாக உள்ளார்’ என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய வீடியோவின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் கேமரா கோணங்களால் ஏற்பட்ட மாயையே ஆறு விரல் போன்ற தோற்றத்திற்கு காரணம் என பேக்ட் செக் நிபுணர்கள் விளக்கியுள்ளனர். திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த தீவிரவாதம் கலந்த பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என அந்நாட்டு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
