மின்விளக்குகள் அலங்காரத்தில் புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் 200 போலீசார் பாதுகாப்பு வேலூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்றிரவு

வேலூர், மே 1: வேலூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்றிரவு மின் அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நடக்க உள்ளதால் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் புஷ்ப பல்லக்கு திருவிழா முக்கியமான ஒன்றாகும். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் இன்றிரவு புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் வெகு சிறப்பாக நடக்க உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், அகிலாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் சுவாமிகள் இன்று இரவு சுமார் 11.30 மணிக்கு கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு ரதத்திற்கு கொண்டு வரப்படும்.

வேலூர் அரிசி மண்டி வீதி சார்பில், சேண்பாக்கம் செல்வ விநாயகர் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி சார்பில், வாணியர் வீதி சார்பில், கனகதுர்கையம்மன் புஷ்ப பல்லக்கு, வேம்புலி அம்மன் கோவில் புஷ்ப அலங்கார தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், வேம்புலி அம்மன் புஷ்ப பல்லக்கு, இந்த ஆண்டு முதன் முறையாக வேலூர் ஆனைகுளத்தம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப வியாபாரிகள் சார்பில், வேலூர் அரசமரப் பேட்டை லட்சுமி நாராயணா புஷ்ப பல்லக்கு ஆகிய புஷ்ப பல்லக்குகள் ஊர்வலமாக இன்றிரவு வர உள்ளது.

புஷ்ப பல்லக்குகள் அனைத்தும் அந்தந்த அமைப்புகள் சார்பில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்தந்த இடத்தில் இருந்து சாலையில் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் ஒன்றாக சேர்ந்து வர உள்ளது. இந்த பல்லக்குகள் பவனியை சாலையின் இருபுறமும் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த பல்லக்குகள் ஊர்வலம் கமிசரி பஜார், பில்டர்பெட் ரோடு, அண்ணா சாலை வழியாக சென்று, வேலூர் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை அருகே முடிவடைந்தது. இந்த விழாவை முன்னிட்டு ஆங்காங்கே பாட்டுக் கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க எஸ்பி சிவராமன் உத்தரவின் பேரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: