சென்னை: சென்னையில் உள்ள 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.20.40 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை கல்லூரி மாணவர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். சென்னை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, சென்னை மாநில கல்லூரி (த), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சைதாப்பேட்டை அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், லேடி லெவிங்டன் அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், நெம்மேலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி (த) ஆகிய 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.20.40 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழா நேற்று சென்னை மாநிலக் கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தில் நடந்தது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மண்டலத்திற்குட்பட்ட 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.20.40 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஏற்கனவே விளையாட்டுத் துறையின் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கு, ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12,600 கிராம ஊராட்சிகளுக்கும் இதே மாதிரி ஒரு ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்சை அரசு கொடுத்திருக்கிறது. இன்றைக்கு உயர்கல்வித்துறையின் சார்பாக ஒவ்வொரு அரசு கல்லூரிக்கும் கொடுத்திருக்கிறோம். இந்த அரசுக்கு விளையாட்டின் மேல் எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை.
பொதுவாக குழந்தைகள் வெவ்வேறு professions படிக்க ஆரம்பிக்கும்போது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டும்போது பெற்றோர்கள் கொஞ்சம் வருத்தப்படுவார்கள், பயப்படுவார்கள். பெற்றோரின் இந்த கவலையை திராவிட மாடல் அரசு முதல்வர் இந்த முறை முறியடித்துள்ளார். விளையாட்டில் இருந்தாலும் உங்களுடைய எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி. இரண்டு வருடத்தில், விளையாட்டில் சாதித்த 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை முதல்வர் கொடுத்திருக்கிறார்.
எனவே, படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு விளையாட்டும், உடல் வலிமையும் மிக முக்கியம். அதற்காகதான் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நீங்கள் விளையாட்டில் மிகப்பெரிய சாதனைகளை செய்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், உயர் கல்வித்துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, உயர்கல்வித்துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
