காஸ் தட்டுப்பாடு தகவல் வெளியாகி வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, சென்னை ஓட்டல் சங்க செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: வணிக நல வாரிய உறுப்பினர்கள் பதவி காலம் 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2 ஆண்டுகள் நீட்டித்து கொடுக்கப்பட்டுள்ளதற்கும், வணிக நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா 10 ஆயிரம் சேமிப்பு கணக்கில் போடப்படும் என்ற அறிவிப்புக்கும் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. உணவகங்களுக்கு காஸ் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க கோரி மத்திய அரசுக்கும், பெட்ரோலிய துறை அமைச்சருக்கும், முதல்வருக்கும் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம். காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்களுக்கு அளிக்கப்படும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும், விலை உயர்வு ஏற்பட்டு விடும். இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.காஸ் தட்டுப்பாடு இருக்கிறது, ஆனால் தாமதமாக தகவல் தருகிறார்கள்.
2 தினங்களுக்கு பிறகு தட்டுப்பாடு ஏற்படும் என சொல்கிறார்கள். தட்டுப்பாடு ஏற்பட்டால் தான் சிரமம் ஏற்படும். பதுக்கல் சூழல் தற்போது வரை இல்லை. ஓட்டல்களில் எல்லாம் அன்றாட தேவையான சிலிண்டரே வாங்குவார்கள். சிலிண்டர் வைக்க தனியாக யாரும் சேமிப்பு கிடங்கு வைக்கவில்லை. அன்றைய தினம் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் கடை நடத்த முடியாது. அதை நம்பி வர மக்களுக்கு உணவு தர முடியாத நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓட்டல்கள் வழக்கம் போல் செயல்படும். எஸ்மா சட்டப்படி உணவகங்களை கொண்டு வந்தால் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
உணவகங்களில் 10 சிலிண்டர் இருந்தால் அவை 2 நாள் வரும். 48 மணி நேரம் கழிந்தால் தான் நிலைமை தெரிய வரும். போரினால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மத்திய ரஷ்யாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய்களை வாங்கி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். கையிருப்பு அதிகமாக வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் தற்காலிக விலை ஏற்றம் என்பது இல்லை.
சென்னை ஓட்டல் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக காஸ் தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வருகிறது. முதல்வர் எஸ்மா அத்தியாவசிய சட்டத்தை அமல்படுத்தி உணவகங்களை அந்த சட்டத்தின் கீழ் கொண்டுவர கோரிக்கை வைத்தோம். எஸ்மா சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் காஸ் இருப்பை அரசு கேட்டுள்ளது. சிலிண்டர் புக் செய்தால் உடனடியாக கிடைக்கும். இப்போது 2 நாட்களுக்கு 3 நாட்கள் பிறகு தான் வரும் என கூறுகிறார்கள்.
உணவகங்கள் மூடப்படுமா, இல்லையா என்பது 2 நாட்களுக்கு பிறகுதான் நிலைமை என்னவென்று தெரியவரும். சேவை சார்ந்த வணிகங்களாக உணவகங்கள் செயல்படுகிறது. உணவகங்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு தலையிட வேண்டும். உணவகங்களை மூடும் நிலை வரக்கூடாது என முதல்வரிடம் கோரியுள்ளோம். உணவகங்களில் விலை ஏற்றம் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
