எல்பிஜி மற்றும் சிஎன்ஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் பாதிப்பு: நீண்ட வரிசையில் நிற்கும் வாகனம்: மக்களை பாதிக்கும் அபாயம்

 

சென்னை: சென்னையில் உள்ள பல வணிக ரீதியான எல்பிஜி நிரப்பும் மையங்களில் போதிய ஸ்டாக் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் இல்லாத காரணத்தால், பல நிலையங்களில் ‘தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதேபோல், பல தனியார் கார்கள், டாக்சிகள் (குறிப்பாக கேப், ஓலா போன்றவை), சிறு வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து சிலவகைகளும் சிஎன்ஜி அல்லது எல்பிஜியை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், செலவு குறைவாக இயக்குவதற்காக பலர் எரிவாயு எரிபொருளை தேர்வு செய்துள்ளனர். ஆனால் தற்போது எல்பிஜி மற்றும் சிஎன்ஜி கிடைக்காத நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி, எல்பிஜி/சிஎன்ஜி பயன்படுத்தும் கார் ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டதால், ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு எரிவாயு நிரப்ப முடியாமல் ஓட்டுநர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். சில கார் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை வீட்டில் நிறுத்தி வைத்துள்ளனர் அல்லது பெட்ரோலுக்கு மாற்றியுள்ளனர், இதனால் செலவு அதிகரிக்கும்.

இதுதொடர்பாக ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாகவே எல்பிஜி எரிவாயு சரியாகக் கிடைக்கவில்லை. ஏற்கனவே பொருளாதார நிலை மோசமாக இருக்கும் போது, இப்போது எரிவாயு பிரச்னை மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் எரிவாயுவை தேட வேண்டியுள்ளது. ஒரு இடத்தில் கிடைக்கிறது என்று சென்றால், 1 கிலோமீட்டருக்கு மேல் வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன.

எரிபொருள் கிடைக்காததால் பல ஆட்டோக்கள் மற்றும் சிஎன்ஜி/எல்பிஜி கார்கள் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளன. சில வாகனங்களை தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. சிஎன்ஜி ஓரளவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் எல்பிஜி கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, விலையும் அதிகரித்துள்ளது. முன்பு ரூ.60க்கு விற்கப்பட்ட எல்பிஜி இப்போது ரூ.70க்கு மேல் விற்கப்படுகிறது. வருமானம் இல்லாத நிலையில் ஆட்டோ ஓட்டுவதா அல்லது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதா என்று தெரியாமல் தவிக்கிறோம். விரைவில் இந்த பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தத் தட்டுப்பாடு ஆட்டோ ஓட்டுநர்களை மட்டுமின்றி, எல்பிஜி மற்றும் சிஎன்ஜி பயன்படுத்தும் கார் உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து சேவையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு விரைவில் விநியோகத்தை சீரமைத்து,
ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

* அவசர தேவைக்கு ராக்கெட் விறகு அடுப்பு

வர்த்தக காஸ் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் ஓவன்கள் உள்ளிட்டவைகளுடன், எலக்ட்ரிக் வகை அடுப்புகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பெரிய ஓட்டல்காரர்கள் ராக்கெட் அடுப்பு என்ற விறகடுப்பிற்கு மாறி வருகின்றனர். இதனால் இவ்வகை அடுப்புகள் மதுரை மார்க்கெட்டில் விற்பனை அதிகரித்துள்ளது.

* மின்சார அடுப்புக்கு டிமாண்ட்

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக தமிழகத்திலும் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 25 நாளாக அதிகரித்துள்ளது ஒன்றிய அரசு. ஒருவேளை போர் சூழல் நீண்ட நாள் நீடித்தால், சமையல் எரிவாயு விநியோகம் முழுமையாக தடைபடும் என்ற அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு இல்லையென்றாலும், விறகு அடுப்பைக் கொண்டு சமைக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு சமையல் எரிவாயு அடுப்பு, மின்சார அடுப்பு ஆகிய இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.

இப்போது ஒருவேளை சமையல் எரிவாயு கிடைக்காமல் போனால், இருக்கும் ஒரே வாய்ப்பு மின்சார அடுப்புகள் மட்டுமே. இதன் காரணமாக மக்கள் தற்போது முதலே, மின்சார அடுப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதனால் தற்போது மின்சார அடுப்புகள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், மின்சார அடுப்புகளுக்கு தேவையான பாத்திரங்களை வாங்க வேண்டிய தேவையும் உள்ளது. இது நடுத்தர மக்களுக்குப் பொருளாதார சுமையை அதிகரிக்கும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், அதிக அளவில் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்த தொடங்கினால் மின்சாரப் பற்றக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* காஸ் சிலிண்டர் கையிருப்பு இல்லை

வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சங்க தேசிய தலைவர் மகேஷ் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சனிக்கிழமை முதல் எச்.பி., பாரத், இண்டேன் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் டன் எரிவாயு தேவை உள்ளது. நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 டன் வரை எரிவாயு தேவைப்படுகிறது. தற்போது கையிருப்பு உள்ள காஸ் சிலிண்டர்கள் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே வரும், அதுவும் ஏற்கனவே புக்கிங் செய்துள்ளனர்.

மேலும், அனைத்து உணவகங்கள், தொழிற்சாலைகளுக்கு காஸ் கையிருப்பு இல்லை. இது தொடர்பான தகவலை கொடுத்து விட்டோம். தட்டுப்பாடு அறிவிப்பு வந்தவுடன் ஏராளமானோர் புக்கிங் செய்யவும், தொலைப்பேசியில் அழைத்தும் கேட்கிறார்கள். பொதுமக்கள் சமையல் பயன்பாட்டிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதுதான். மீண்டும் மறு அறிவிப்பு எப்போது அரசு வழங்கும் என காத்திருக்கிறோம்.

மொத்த விற்பனையில் 40 முதல் 50 சதவீதம் தொழில்துறையினருக்கு விற்பனையாகிறது. மேலும், எங்கள் துறையை சார்ந்துள்ள தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என தெரியவில்லை. ஆனால், பயன்பாட்டு விகிதாச்சாரம் கேட்டுள்ளனர்.

அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. மூன்று ஆயில் நிறுவன இயக்குநர்களுடன் ஆலோசனை நடப்பதாக தகவல் வருகிறது. ஓரிரு நாட்கள் இது எப்படி செல்லும் என தெரியவரும். ஆயில் நிறுவனங்கள் முழுமையான விநியோகத்தை நிறுத்தாமல், ரேஷன் அடிப்படையிலாவது விநியோகம் செய்ய வேண்டும். அப்போது தான் எங்கள் தொழிலும் பாதிக்காது. மேலும், சிறு வியாபாரிகளுக்கு செல்லும் 5 சதவீத விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: