சமூக வலைதளங்களில் அவதூறு: மம்மூட்டியிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்

 

திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் அவதூறு பரப்பியதை தொடர்ந்து பிரபல நடிகர் மம்மூட்டியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கேட்டார். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு டவுன்ஷிப் அமைத்து வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி அரசு கட்டிக் கொடுத்த வீடுகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். தனிப்பட்ட முறையில் சென்றிருந்ததால் தன்னுடைய வருகை குறித்து யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் மம்மூட்டி வருவது குறித்து அறிந்தவுடன் சிபிஎம் வயநாடு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்தனர். மம்மூட்டி சென்ற அனைத்து இடங்களுக்கும் ரபீக்கும் உடன் சென்றார். இதனால் எரிச்சலடைந்த அவர், என்னுடன் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சேர்ந்து வர வேண்டாம். இதைப் பார்ப்பவர்கள் நீங்கள் தான் என்னை அழைத்து வந்ததாக கருதுவார்கள் என்றார்.

இதன்பிறகு மம்மூட்டி திரும்பிச் செல்லும்போது, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுத்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அரசு வீடு கட்டிக் கொடுக்கவில்லை, இது மக்கள் கொடுத்த வரிப்பணத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்றார். மம்மூட்டியின் இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பினர். இது மம்மூட்டிக்கு வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மம்மூட்டியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது: கேரளாவின் நன்மைகளுக்காக எப்போதுமே ஆதரவு தெரிவித்தவர்களில் மம்மூட்டி ஒரு முக்கியமான நபர் ஆவார்.

அவர் யாரிடமும் சொல்லாமல் தான் வயநாட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்ப்பதற்காக சென்றார். மம்மூட்டி வருவது குறித்து அறிந்தவுடன் சிபிஎம் வயநாடு மாவட்ட செயலாளர் ரபீக்கும் அங்கு சென்றார். ரபீக்கிடம் மம்மூட்டி அவ்வாறு சொன்னதில் தவறு ஏதும் இல்லை. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புவது தவறாகும். அதற்காக நான் மம்மூட்டியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: