மும்பை: சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அதிரடியாக விற்பனை செய்து வெளியேறினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த வர்த்தக தினத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை சரிவை நோக்கி நகரத் தொடங்கின. ஆசிய சந்தைகளான ஜப்பான் நிக்கி மற்றும் கொரியாவின் கோஸ்பி ஆகியவை இன்று காலை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சரிந்ததால், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன், சென்செக்ஸ் 2,047 புள்ளிகள் சரிந்து 76,872 என்ற நிலையை எட்டியது. இது 2.59 சதவீத வீழ்ச்சியாகும். அதேபோல், நிஃப்டி 600 புள்ளிகள் சரிந்து 23,850 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இது 2.45 சதவீத சரிவாகும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள போர் மற்றும் ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 115 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ எண்ணெய் 118 டாலராகவும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, தனது தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகராக 92.25 ரூபாயாக சரிந்துள்ளது. எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கி பங்குகள், ஆட்டோ மற்றும் ஐடி துறை பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.
குறிப்பாக ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டிகோ ஏவியேஷன் மற்றும் டயர் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் உற்பத்தி செலவு அதிகரிப்பால் பெரும் சரிவை கண்டுள்ளன. இது குறித்து பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறுகையில், ‘தற்போது பங்குச்சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நிஃப்டி 23,800 என்ற முக்கிய ஆதரவு நிலையைத் தாண்டினால், மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் எண்ணெய் விலை உயர்வே இந்த நிலைக்கு முக்கிய காரணம்’ என்று தெரிவித்தனர். இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
