ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 115 டாலரை தாண்டியது; இந்திய பொருளாதாரத்தை புரட்டி போடும் அபாயம்? அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் திடீர் சிக்கல்

 

புதுடெல்லி: ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 115 டாலரை தாண்டிய நிலையில், இந்தியாவில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளதால் சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப். 24ம் தேதி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியது. இந்த மோதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 139 டாலர் வரை உயர்ந்து, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்ததால், இந்தியா போன்ற நாடுகள் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயைப் பெற்றுத் தங்களின் பொருளாதாரத்தைச் சமாளித்தன. அந்த ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் இந்தியாவின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரித்தது.

தற்போது ஈரான் போர் பதற்றம் காரணமாக மீண்டும் ஒரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலரைத் தாண்டியுள்ளது. தற்போது இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 93.41 டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த வாரத்தை விட 28 சதவீதம் அதிகமாகும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் 20 சதவீத எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இதனால் சர்வதேச பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 12 சதவீதம் வரையிலும், ஜப்பானின் நிக்கி குறியீடு 2 சதவீதம் வரையிலும் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு இறக்குமதி செலவு 16,000 கோடி ரூபாய் அதிகரிக்கும். தற்போதைய 27 சதவீத விலையேற்றத்தால் நாட்டின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை 10 டாலர் அதிகரிப்பது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 0.5 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘எண்ணெய் விலை 10 சதவீதம் உயரும்போது உலகப் பொருளாதார வளர்ச்சி 0.15 சதவீதம் பாதிக்கப்படும். இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 92 ரூபாயைக் கடக்கும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சூழல் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை 120 முதல் 150 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு 2022ம் ஆண்டு 120 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போதுள்ள கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் இறக்குமதி செலவு 150 பில்லியன் டாலரைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து எரிசக்தித் துறை வல்லுநர்கள் கூறுகையில், ‘கடந்த 2022ம் ஆண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வரிக்குறைப்பு செய்யப்பட்டது.

தற்போதும் அதே போன்ற நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்தால் மட்டுமே சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிலவிய அதே பதற்றமான சூழல், சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 7.8 சதவீதம் என்ற உச்சத்தை எட்டியது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனைச் சமாளிக்க ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான வரியை 6 ரூபாயும் குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும் இரும்பு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான சுங்க வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்நாட்டு விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது நிலவும் சூழலில் ஒன்றிய அரசு நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

எரிபொருள் வரிகள் மூலம் ஆண்டுக்கு 5.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால் வரியைக் குறைப்பதில் ஒன்றிய அரசு கவனமாக உள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு 3 முதல் 5 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த அமைப்பு ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்த போதே, இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. அதேநேரம் மாநில அரசுகள் தங்களின் வாட் வரியைக் குறைக்குமாறும் ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள கையிருப்பு லாபத்தைக் கொண்டு விலையை உயர்த்தாமல் தற்காலிகமாக நிலைநிறுத்தி வருகின்றன. வரும் நாட்களில் போர் சூழலைப் பொறுத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: