படுக்கை அறையில் வேறொரு பெண்ணுடன் என் கணவர் இருந்ததை பார்த்தேன்: கேரள அமைச்சர் கணேஷ்குமாரின் மனைவி பரபரப்பு பேட்டி

 

திருவனந்தபுரம்: என்னுடைய கணவரை வீட்டின் படுக்கை அறையில் வேறொரு பெண்ணுடன் மோசமான நிலையில் பார்த்தேன். போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமாரின் மனைவி கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் கணேஷ்குமார். இதற்கு முன்பு உம்மன் சாண்டி அமைச்சரவையிலும் இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

கேரளா காங்கிரஸ் (பி) நிறுவன தலைவரான மறைந்த பாலகிருஷ்ண பிள்ளையின் மகனான இவர், கடந்த 2001ம் ஆண்டு முதல் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 100க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் கணேஷ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது முதல் மனைவி யாமினி தங்கச்சியை விவாகரத்து செய்தார். இதன்பிறகு கடந்த 2014ம் ஆண்டு பிந்து மேனன் என்பவரை இவர் இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்நிலையில் அமைச்சர் கணேஷ்குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் செக்ஸ் புகார் கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியது: டந்த 2014ம் ஆண்டு எனக்கும், அமைச்சர் கணேஷ் குமாருக்கும் திருமணம் நடந்தது. கணேஷ் குமாருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த 2019 முதல் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நான் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியபோது கணேஷ்குமாரை வீட்டின் படுக்கை அறையில் வைத்து வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்தேன்.

அதை நான் என்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதனால் கணேஷ் குமாரின் உதவியாளர்கள் என்னிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்தனர். அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லவும் விடவில்லை. உடனடியாக என்னுடைய உறவினரான பாஜ கவுன்சிலர் லேகாவை போனில் அழைத்து விவரத்தை கூறினேன்.

அவர் கூறியதின்படி போலீசில் புகார் செய்தேன். போலீசார் வீட்டுக்கு வந்தபோதிலும் என்னுடைய புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்று விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இடதுசாரி கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் கணேஷ் குமார் மீது அவரது மனைவி கூறியுள்ள இந்த புகார், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் கணேஷ்குமாரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே உம்மன் சாண்டி அமைச்சரவையில் இவர் அமைச்சராக இருந்தபோது முதல் மனைவி யாமினியும் இதே போல ஒரு புகார் கூறினார். இதைத்தொடர்ந்து அப்போது கணேஷ்குமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: