குவாலியர்: 2024 இடைத்தேர்தலின் போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை வெளியிடாததற்காக, விஜய்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் மல்ஹோத்ராவின் தேர்தல் வெற்றி செல்லாதது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள விஜய்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முகேஷ் மல்ஹோத்ரா 7364 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் ராம்நிவாஸ் ராவத்தை வீழ்த்தினார். அவரது வெற்றியை எதிர்த்து பா.ஜ வேட்பாளர் ராம்நிவாஸ் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,’ காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் மல்ஹோத்ரா தாக்கல் செய்த வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை மறைத்துள்ளார்.
எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை மபி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா விசாரித்து நேற்று முகேஷ் மல்ஹோத்ராவின் வெற்றியை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும் பாஜவின் ராம்நிவாஸ் ராவத் இரண்டாவது இடத்தைப் பிடித்ததால், அவரை விஜய்பூர் எம்எல்ஏவாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
